கணவரின் கண்முன்னே சம்பவம் தேன் சேகரிக்க சென்ற பெண்ணின் 4 விரல்களை கடித்து துண்டாக்கிய கரடி
ராஜபாளையத்தில் கணவருடன் வனப்பகுதிக்குள் தேன் சேகரிக்க சென்ற பெண்ணின் 4 விரல்களை கடித்து கரடி துண்டாக்கியது. அந்த பெண்ணுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் அருகே அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது மனைவி கருப்பாயியை அழைத்துக் கொண்டு ராஜாம்பாறை பீட் வனப்பகுதியில் நேற்று தேன் சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று இருவரையும் விரட்ட தொடங்கியது. எனவே பாதுகாப்புக்காக கணவனும், மனைவியும் அருகே இருந்த மரத்தில் ஏற முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கருப்பாயி தடுமாறி கீழே விழுந்தார். அதைத்தொடர்ந்து கரடி கருப்பாயியின் இடது கையை கடித்ததில், 4 விரல்கள் துண்டாகின. மேலும் எழுந்து தப்பிக்க முயன்றவரை பின் தலையில் தாக்கி விட்டு கரடி ஓடிவிட்டது.
தனது கண்முன்னால் நடந்த இந்த சம்பவத்தைக்கண்டு சுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் மனைவியை அழைத்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தார். உறவினர்கள் துணையோடு மனைவியை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். 4 விரல்கள் துண்டான நிலையில் கருப்பாயிக்கு முதலுதவி செய்யப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெண்ணை கரடி தாக்கிய சம்பவம், மலைவாழ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.