நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு உதவி பெற்று தனியார் பள்ளிகளில் படிக்க விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-01 22:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை சமூக பாதுகாப்புத்திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– கட்டுமான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் நோக்கில் தொழிலாளர் துறையின் கீழ் பல்வேறு நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளிகளின் அறிவுக் கூர்மையுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, சிறந்த தனியார் பள்ளிகளில் 6–ம் வகுப்பு மற்றும் 11–ம் வகுப்புகளில் சேர்ந்து கல்வி வழங்கிட 2017–ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளிகளின் குழந்தைகள் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஊராட்சி பள்ளிகளில் 5–ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக அளவில் மதிப்பெண் பெற்ற குழந்தைகள் வட்டாரத்திற்கு ஒரு மாணவ–மாணவி வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு 6–ம் வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகளில் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகள் மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் (3 மாணவிகள் உள்பட) தேர்ந்தெடுக்கப்பட்டு 11–ம் வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்கள்.

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் கட்டுமானத் தொழிலாளர் இன்றைய தேதி வரை புதுப்பித்து உறுப்பினராயிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டணம் அரசு உதவியாக வழங்கப்படும்.

விடுதியில் தங்கி படிப்பவராயின் மேற்படி பள்ளிக் கட்டணம் தவிர ஒரு ஆண்டுக்கு விடுதிக்கட்டணம் ரூ.15 ஆயிரம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகியவை அரசு உதவியாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ள பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி)அலுவலகம், மதுரை ரோடு சர்ச் எதிரில், சிவகங்கை. என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்