கட்டிட தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கட்டிட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என நெல்லையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;
நெல்லை,
கட்டிட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என நெல்லையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டம்
தமிழக தொழிலாளர் சங்கம், எவரெஸ்ட் பொது தொழிலாளர் சங்கம், மருத நில கட்டிட தொழிலாளர் சங்கம், காந்தி தொழிலாளர் சங்கம், மூவேந்தர் கட்டிட தொழிலாளர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம் நெல்லையில் நடந்தது. காந்தி தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திர காந்தி தலைமை தாங்கினார்.
கட்டிட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சந்திரன், பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னக கட்டிட தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வியனரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஓய்வூதியம்
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்துள்ள ஓய்வூதிய பயனாளர்களின் விண்ணப்பத்தை ஏற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் சில சிறு, சிறு காரணங்களுக்காக நிராகரிக்கப்படுகின்றன. தொழிலாளர் நலவாரியத்தின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. அந்த விண்ணப்பங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து, இயற்கை மரணம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 12-ந் தேதி நெல்லை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் முடிவில், சுப்புராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் பல்வேறு கட்டிட தொழிற்சங்கங்களை சேர்ந்த ரூபா, சுப்புலட்சுமி, தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.