வீட்டில் பாத்திரங்கள் திருடியவருக்கு 6 மாதம் சிறை மேலும் 2 வழக்குகளில் 4 பேருக்கு அபராதம்

வீட்டில் பாத்திரங்கள் திருடியவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2019-06-01 21:30 GMT
திருச்செந்தூர், 

வீட்டில் பாத்திரங்கள் திருடியவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 2 வழக்குகளில் 4 பேருக்கு அபராதம் விதித்து திருச்செந்தூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பாத்திரங்கள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஜெபநானபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ஆபிரகாம் (வயது 58). இவருக்கு சொந்தமான பண்ணைவீடு அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 26-4-2015 அன்று உடன்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த முத்துக்குமார் (41) என்பவர் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை பாத்திரங்களை திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்செந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், முத்துக்குமாருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அபராதம்

திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன் மனைவி ரேகா. இவருடைய உறவினர் அதே பகுதியை சேர்ந்த ராஜகுமார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரேகாவின் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜி, பட்டாணி, சரண்ராஜ் ஆகியோர் ரேகாவிடம் மோட்டார் சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறியதாக தெரிகிறது.

இதில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே விஜி, பட்டாணி, சரண்ராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரேகாவை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு திருச்செந்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், விஜி, பட்டாணி, சரண்ராஜ் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மற்றொரு வழக்கு

திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணபாண்டி மனைவி பாரதாதேவி (42). இவர் கடந்த 23.7.2015 அன்று அந்த பகுதியில் உள்ள தேரியில் விறகு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த நடுத்தெருவை சேர்ந்த ராஜா (39) தான் குத்தகைக்கு எடுத்த இடத்தில் நீ எப்படி விறகு சேகரிக்கலாம் என கூறி, பாரதாதேவியை கம்பால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து பாரதாதேவி திருச்செந்தூர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு திருச்செந்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், ராஜாவுக்கு ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்