ஏற்காட்டில் கோடை விழா: படகு போட்டியில் அசத்திய சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நேற்று படகு போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டு அசத்தினார்கள்.
ஏற்காடு,
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. அண்ணா பூங்காவில் ரோஜா, மேரிகோல்டு, ஜினியா, ஸ்னாப்ட்ராகன், கேலண்டுல்லா, ஆஸ்டர், டையான்தஸ் ஸ்வீட், சால்வியா, கோம்பரனா, செலோசியா கிரிஸ்ட், அல்லீசம் ஈஸ்டர், பெட்டூனியா, பான்சி, பாஸ்சம் டோம், கைலார்டியா மேசா, காஸ்மாஸ் சொனாட்டா, ஆந்தூரியம், கிரைசாந்தியம் போன்ற மலர்களை கொண்ட 15 ஆயிரம் பூச்செடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரு லட்சம் கார்னேஷன் மற்றும் ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம், விமானப்படை விமானி அபிநந்தன் பயணித்த எம்.21 விமானம், பென்குவின் குடும்பம், உலக உருண்டை, கிரிக்கெட் உலக கோப்பை உள்ளிட்ட உருவ அமைப்புகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கிறார்கள்.
கோடை விழாவின் 2-வது நாளான நேற்று சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அசத்தினார்கள்.. போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்்ந்த கபிலன்-நிகிதா வர்ஷா, நாமக்கல்லை சேர்ந்த தியாகராஜன்-சுதா, சென்னையை சேர்ந்த பரமேஷ்-செல்வி ஆகியோர் பிடித்தனர்.
மகளிர் பிரிவில் முதல் 3 இடங்களை பெங்களூருவை சேர்ந்த ஜெயந்தி-கவிதா, கரூரை சேர்ந்த சாந்தி-காந்திமதி, சங்கராபுரத்தை சேர்ந்த ராதா-ஹரிணி ஆகியோர் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் வந்தவாசியை சேர்ந்த முருகன்-ஹரிகிருஷ்ணன், மேட்டூரை சேர்ந்த சஞ்சய்-பிரவீன், ராசிபுரத்தை சேர்ந்த ஐசக் பராத் அலி -கபிலன் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். ெதாடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்காடு கலையரங்கில் நடைபெற்ற பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியில், குதிரைவாலி பனியாரம் சமைத்த ஏற்காட்டை சேர்ந்த லாங்கில் பேட்டை சமந்தா முதலிடத்தையும், பாசிபருப்பு உருண்டை சமைத்த செம்மநத்தம் பிரியங்கா 2-வது இடத்தையும், வேர்கடலை உருண்டை சமைத்த ஏற்காட்டை சேர்ந்த சரளாதேவி 3-வது இடத்தையும் பெற்றனர். கொழு, கொழு குழந்தை போட்டியில் முதலிடத்தை 2 குழந்தைகள் பெற்றன. இதன்படி ஏற்காடு கொம்மக்காடு பகுதியை சேர்ந்த பிரியங்கா மகன் சாய் மற்றும் அயோத்தியாப்பட்டணம் ரோஜா மகள் யாழினி ஆகியோர் முதலிடத்தையும், ஏற்காடு இளவரசி மகன் அகிலேஷ் 2-வது இடத்தையும், ராசிபுரம் நிவேதா மகன் நித்தீஷ் 3-வது இடத்தையும் பெற்றனர்.