பள்ளிகள் நாளை திறப்பு, புத்தகப்பை வாங்குவதற்கு கடைகளில் குவிந்த பெற்றோர்
பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையொட்டி புத்தகப்பை வாங்குவதற்கு கடைகளில் பெற்றோர் குவிந்தனர்.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட உள்ளன. அதேநேரம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள், மழலையர் வகுப்புகளில் சேரும் குழந்தைகளுக்காக கடைகளில் பல்வேறு வகையான புத்தகப்பை விற்பனை செய்யப்படுகின்றன.
திண்டுக்கல் ஏ.எம்.சி.சாலை, மெயின்ரோடு, பேகம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் புத்தகப்பை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் குறைந்தபட்சம் ரூ.200 முதல் புத்தகப்பை விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் மாணவர்கள் மதிய சாப்பாடு கொண்டு செல்வதற்கும் சிறிய அளவில் பை விற்கப்படுகிறது. அது ரூ.125 முதல் ரூ.250 விற்பனை செய்யப்படுகிறது.
இந்த புத்தகப்பை மற்றும் மதிய சாப்பாடு கொண்டு செல்லும் பை வாங்குவதற்காக கடைகளுக்கு பெற்றோர் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்றைய தினம் திண்டுக்கல் நகரில் பெரும்பாலான கடைகளில் கூட்டம் அலைமோதியது. மழலையர் வகுப்பில் சேரும் குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் படங்களுடன் பைகள் இருந்தன. பெற்றோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
அதேபோல் மாணவர்கள் மதிய உணவுடன், தண்ணீர் எடுத்து செல்வதற்காக அனைத்து பெற்றோரும் பாட்டில்களை வாங்கினர். ஒருசிலர் மட்டுமே பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கினர். ஆனால், பெரும்பாலான பெற்றோர் எவர்சில்வர் பாட்டில்களை வாங்கினர். அதேபோல் பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் விற்கப்படும் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.