நாளை பள்ளிகள் திறப்பு: திருப்பூர் கடைவீதிகளில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்

நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் திருப்பூர் கடைவீதிகளில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர் புத்தகப்பை, நோட்டுகளை வாங்க ஆர்வம் காட்டினார்கள்.

Update: 2019-06-01 22:15 GMT
திருப்பூர்,

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அரசு விலையில்லா நோட்டுகள், புத்தகங்கள், கலர் பென்சில், கிரயான்ஸ், கணித உபகரணபெட்டி, புத்தகப்பை, காலணி, சீருடை, சத்துணவு உள்பட 14 விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளில் நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டாலும் மற்ற பொருட்களை வழங்க காலதாமதமாகும்.

எனவே மாணவர்கள் தங்களுக்கு புத்தகப்பை, பென்சில், காலணி, வினா-விடை புத்தகம் போன்றவற்றை வாங்கி தரும்படி பெற்றோரை வற்புறுத்தி வருகிறார்கள். நல்ல டிசைன்களில் உள்ள புத்தகப்பைகள், மற்றும் வினா-விடை புத்தகங்கள் விரைவில் விற்று தீர்ந்து விடும் என்பதால் மாணவர்கள் அவற்றை வாங்க பெற்றோர்களை அவசரப்படுத்துகின்றனர். முதல் நாள் பள்ளிசெல்லும் போது அனைத்து பொருட்களும் புதிதாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மாணவர்களின் விருப்பமாக இருப்பதால், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் திருப்பூரில் உள்ள புத்தகக்கடை மற்றும் புத்தகப்பை விற்பனை கடைகளில் நேற்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர். தங்கள் குழந்தைகளுடன் கடைகளுக்கு வந்த பெற்றோர் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு பேனா, பென்சில், நோட்டு, புத்தகங்கள் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்தனர். இது குறித்து பெற்றோர் சிலர் கூறும் போது, மிகவும் அவசியமான ஒரு சில பொருட்களை வாங்க வந்தோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளின் விலை அதிகரித்துள்ளது.

இருந்தாலும் பணத்தை பற்றி கவலைப்படாமல் குழந்தைகளின் மனம் நோகாத வகையில் அவர்கள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுத்து விட்டோம் என்ற மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இனி படித்து நல்ல மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெறுவது அவர்கள் பொறுப்பு என்றனர்.

விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும் போது, நோட்டு, புத்தகங்களின் விலை கடந்த ஆண்டை விட 15 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. அதே போல் புத்தகப்பைகளின் விலையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்தாலும் விற்பனையில் பாதிப்பில்லை என்றனர்.

மேலும் செய்திகள்