ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 தொழிலாளிகள் சாவு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-06-01 22:45 GMT
பென்னாகரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சோளிங்கர் வட்டம் ஜி.கே. மூப்பனார் தெருவை சேர்ந்தவர்கள் வேலு (வயது36), கோபிநாத்(25). தொழிலாளிகளான இவர்கள் அதேபகுதியை சேர்ந்த உறவினர்கள் 22 பேருடன் நேற்று முன்தினம் ஒரு வேனில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அனைவரும் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் சிறுவர் பூங்கா பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது வேலு, கோபிநாத் ஆகிய 2 பேரும் காவிரி ஆற்றில் நீந்தி சென்ற போது திடீரென மாயமானார்கள்.

இவர்கள் 2 பேருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் திரும்பி வந்துவிடுவார்கள் என்று உறவினர்கள் கருதினர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஒகேனக்கல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் தீவிரமாக தேடினர். ஆனால் அவர்கள் எங்கும் காணவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் 2 பேரையும் தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர். அப்போது மணல் திட்டு பகுதியில் வேலுவின் உடலையும், கோத்திக்கல் பகுதியில் கோபிநாத்தின் உடலையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். இதையடுத்து போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது வேலு, கோபிநாத் ஆகிய 2 பேரும் காவிரி ஆற்றில் நீந்தி சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. மேலும் இறந்த வேலு, கோபிநாத் ஆகியோருக்கு திருமணமாகி மனைவிகளும், குழந்தைகளும் உள்ளனர். காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்