வருசநாடு அருகே, சாலை வசதியில்லாமல் கிராம மக்கள் அவதி
வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் சாலை வசதியில்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடமலைக்குண்டு,
வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் அண்ணாநகர், கோடாலியூத்து உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. மேலும் கிராமங்களை சுற்றிலும் ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களுக்கு தார்சாலை அமைக்கப்படவில்லை.
கரடுமுரடான மலைப்பாதை மட்டுமே அமைந்துள்ளது. சாலை வசதி இல்லாததால் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இந்த கிராமங்களுக்கு செல்வதில்லை. இதனால் விவசாயிகள் விளைபொருட்களை மாட்டு வண்டிகளிலும், தலைச்சுமையாகவும் எடுத்து வரும் நிலை உள்ளது.
இதுதவிர இந்த கிராமங்களுக்கான ரேஷன் கடை தும்மக்குண்டுவில் செயல்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கடையில் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் தலைச்சுமையாகவே தூக்கி செல்லும் நிலை காணப்படுகிறது. அண்ணாநகர், கோடாலியூத்து ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதையின் பெருமளவு பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைப்பாதை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு செல்லும் பாதை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் தார்சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேலும் கரடுமுரடான பாதையை சீரமைப்பதற்கு கூட வனத்துறையினர் அனுமதி வழங்குவதில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். கிராமங்களில் யாருக்கேனும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அவர்களை டோலி கட்டி தூக்கி வரும் நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனால் மலைக்கிராம மக்கள் பலருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பலியாக நேரிடுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அண்ணாநகர், கோடாலியூத்து கிராமங்களின் மலைப்பாதையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை அளித்துள்ளனர்.