நவீன பெட்டியில் படுக்கைக்கு அருகே அபாயசங்கிலி, பயணிகள் தூக்கத்தில் செய்யும் சேட்டைகளால் நடுவழியில் நிற்கும் ரெயில்கள்

நவீன பெட்டிகளில் படுக்கைக்கு அருகே இருக்கும் அபாய சங்கிலியை பயணிகள் தூக்கத்தில் இழுத்து விடுவதால் ரெயில்கள் நடுவழியில் நிற்கின்றன.

Update: 2019-06-01 22:30 GMT
திண்டுக்கல்,

மக்கள் நீண்ட தூர பயணத்துக்கு, ரெயிலையே தேர்வு செய்கின்றனர். இதற்கு பஸ்சை விட ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதோடு, உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதே காரணம் ஆகும். இதனால் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்க முடிகிறது. எனவே, ரெயில் பயணிகளின் வசதிக்காக புதிதாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அதோடு ரெயில்கள், ரெயில் நிலையங்களில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் ரெயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி, பொதிகை, நெல்லை உள்ளிட்ட அதிவிரைவு ரெயில்களில் நவீன ரெயில் பெட்டிகள் இணைக் கப்பட்டுள்ளன. இதில் படுக்கைகள் உள்பட அனைத்தும் புதிய வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இது ரெயில் பயணிகளுக்கு பல வகையில் வசதியாக இருக்கிறது.

அதேநேரம் நவீன ரெயில் பெட்டிகளில் ஒருசில குறைபாடுகளும் இருப்பதாக பயணிகள் புலம்புகின்றனர். இதில் முக்கியமானது அபாய சங்கிலி ஆகும். ரெயில் பயணத்தின் போது அவசர உதவி தேவைப்படும் பயணிகளுக் காகவே அபாய சங்கிலி ஒவ்வொரு பெட்டியிலும் வைக்கப்படுகிறது. அதை இழுத்தால் உடனே ரெயில் நிறுத்தப்படுவதோடு, ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு வந்து பயணிக்கு உதவுவார்கள்.

இதற்காக பழைய ரெயில் பெட்டிகளில் இருபுறமும் இருக்கும் படுக்கைக்கு நடுவே அபாய சங்கிலி பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் வலுவாக பிடித்து இழுத்தால் தான் அபாய சங்கிலி ஒலிக்கும். ஆனால், நவீன பெட்டிகளில் மேல்படுக்கைக்கு மிக அருகில் அபாய சங்கிலி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மிகவும் எளிதாக ஒலிக்க செய்யும் வகையில் இலகுவாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் தூக்கத்தில் கை அல்லது கால் அபாய சங்கிலியை தொட்டுவிட, உடனே அதுவும் ஒலித்து விடுகிறது. உடனே ரெயில் நடுவழியில் நிறுத்தப்படுகிறது. பொதுவாக தேவையில்லாமல் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினால், சம்பந்தப்பட்ட பயணிக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், தூக்கத்தில் தெரியாமல் கைப்பட்டு அபாய சங்கிலி உரசினால் என்ன செய்வது? என்று தெரியாமல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தவித்து வருகின்றனர்.

அதிலும் ஒருசிலர் பையோடு, மேல்படுக்கையில் தூங்குகின்றனர். இறங்குவதற்கு தயாராகும் போது கை உரசி அபாய சங்கிலி ஒலித்து விடுவதாக ரெயில் பயணிகள் கூறுகின்றனர். எனினும், ரெயில் நடுவழியில் நிறுத்தப்படுவதால் ஒருசிலருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும், பயணிகளுக்கும் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அபாய சங்கிலியை மாற்றி அமைக்க வேண்டும் என்பது ரெயில்வே பாதுகாப்பு படையினர், பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் செய்திகள்