ஆலங்குளம் அருகே பயங்கரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர் கல்லால் தாக்கி கொலை உறவினர் உள்பட 2 பேர் கைது

ஆலங்குளம் அருகே மது குடித்ததை கண்டித்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-01 22:00 GMT
ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே மது குடித்ததை கண்டித்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்

நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் அருகே கூவாச்சிபட்டியைச் சேர்ந்தவர் வேல்துரை (வயது 40). இவர் அப்பகுதியில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் ஆலங்குளம் அருகே நெட்டூர் அம்மன் கோவில் தெருவில் உள்ள தன்னுடைய உறவினரான முருகன் மகன் முத்துகுமார் (30) வீட்டுக்கு சென்றார். வேல்துரை, முத்துகுமாருக்கு சித்தப்பா உறவுமுறை ஆவார்.

பின்னர் மாலையில் வேல்துரை, அப்பகுதியில் உள்ள முத்துகுமாரின் தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு தோட்டத்தில் முத்துகுமாரும், அவருடைய நண்பரான அப்பகுதியைச் சேர்ந்த முத்துபாண்டி மகன் மகாராஜனும் (28) மது குடித்துக் கொண்டிருந்தனர்.

கல்லால் தாக்கி கொலை

இதனை வேல்துரை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்துகுமார், மகாராஜன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வேல்துரையை கல்லால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேல்துரை ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, வேல்துரையை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் வேல்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேர் கைது

இதையடுத்து முத்துகுமார், மகாராஜன் ஆகிய 2 பேர் மீதும் ஊத்துமலை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட வேல்துரைக்கு செல்வி என்ற மனைவியும், அபிநயா (15) என்ற மகளும், அனீஷ்குமார் (13), அருண் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மது குடித்ததை கண்டித்த கேபிள் டி.வி. ஆபரேட்டரை உறவினர் உள்பட 2 பேர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்