சர்வதேச பால் தின விழா: சிறந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு பரிசு ஆவின் தலைவர் என்.சின்னத்துரை வழங்கினார்
சர்வதேச பால் தின விழாவையொட்டி, நெல்லையில் நடந்த விழாவில் சிறந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை பரிசு வழங்கினார்.
நெல்லை,
சர்வதேச பால் தின விழாவையொட்டி, நெல்லையில் நடந்த விழாவில் சிறந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை பரிசு வழங்கினார்.
சர்வதேச பால் தின விழா
நெல்லை பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் சர்வதேச பால் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆவின் பொது மேலாளர் ரங்கநாத துரை தலைமை தாங்கினார். நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும் கேடயம், பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
கிராமப்புறங்களில் பசு கன்றுகளை சிறந்த முறையில் வளர்த்தவர்களுக்கும், சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச பால் தினத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 4 இடங்களில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் ஏராளமான மாடுகளுக்கு இலவச சிகிச்சை செய்யப்பட்டது. சிறப்பான முறையில் கால்நடை மருத்துவ முகாம் நடத்திய டாக்டர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் ஆவின் தலைவர் என்.சின்னத்துரை பேசியதாவது:-
ஊட்டச்சத்து மிகுந்த பானம்
பால் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த பானம் மட்டுமின்றி, அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும், பாலை விரும்பி அருந்தி வருகின்றனர். பாலின் அவசியத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதி சர்வதேச பால் தின விழா கொண்டாடப்படுகிறது.
நான் ஆவின் தலைவராக பொறுப்பேற்றபோது, தினமும் 42 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தினமும் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் தினமும் 60 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நெல்லை டவுனில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய புதிய பாலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
367 கூட்டுறவு சங்கங்கள்
தற்போது நெல்லை ஆவின் ஒன்றியத்தில் 367 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 53 ஆயிரத்து 474 உறுப்பினர்கள் உள்ளன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் 72 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை ஒரு லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நெல்லை ஆவின் ஒன்றியத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலானது 8 குளிர்விப்பான்கள், 3 குளிரூட்டும் நிலையங்கள் மூலம் குளிரூட்டப்படுகிறது. உள்ளூர் விற்பனைக்கு போக மீதமுள்ள பாலானது கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய ஒன்றியங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தயிர் விற்பனை
மேலும் தற்போது தினமும் 1,700 லிட்டர் தரமான தயிர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை 3 ஆயிரம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட தாது உப்பு கலவை ஆலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தாது உப்பு கலவையானது நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் ஒன்றியம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பால் உற்பத்தியார்கள் கூட்டுறவு இணையம் வழிகாட்டுதலின்படி, 10 கிராமங்களில் பொலி காளை கன்று உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் பாலை அதிக அளவு விற்பனை செய்ய வேண்டும். உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக அளவு பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு ஆவின் தலைவர் என்.சின்னத்துரை கூறினார்.
கண்காட்சி
சர்வதேச பால் தின விழாவையொட்டி, ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆவின் பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
விழாவில் ஆவின் உதவி பொது மேலாளர் அருணகிரிநாதன், மேலாளர் தங்கையா, விற்பனை பிரிவு உதவி பொது மேலாளர் சாந்தி, கால்நடை டாக்டர் ஈசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.