மாணவர்கள் புத்தகங்களை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு

மாணவர்கள் புத்தகங்களை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த கோடைகால சிறப்பு முகாம் நிறைவு விழாவில் கலெக்டர் ராமன் பேசினார்.

Update: 2019-06-01 23:00 GMT
வேலூர், 

வேலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு முகாம் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி நிறைவடைந்தது. இதில், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், யோகா பயிற்சி, செஸ், கையெழுத்து பயிற்சி, பல்லாங்குழி, பரமபதம், ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு, இசைப்பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் முகாமில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் தொடர்பாக மாணவர்களுக்கு போட்டிகளும் நடத்தப்பட்டன.

கோடைகால சிறப்பு முகாம் நிறைவு விழா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா வேலூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன், காட்பாடி ரெட்கிராஸ் சங்க செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் பழனி வரவேற்றார்.

விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு முகாமில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கி பேசியதாவது:-

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் பெரிதும் உதவுகிறது. மாணவர்கள் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள அதிகளவு புத்தகங்கள் படிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் பகுதியின் அருகேயுள்ள நூலகத்துக்கு சென்று அங்குள்ள நூல்களை படிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் செல்போனில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தமிழில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பழமையான பல வேதங்களுக்கு எழுத்து வடிவம் கிடையாது. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளில் சில வேதங்கள் எழுத்து வடிவம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது ‘கூகுள்’ நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவி செய்கிறது. இதுபோன்ற வசதிகள் நிறைந்துள்ள நிலையில் மாணவர்கள் புத்தகங்களை ஆயுதமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஓய்வுப்பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராசகோபாலன், காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் சிவசுப்பிரமணியம், துணைத்தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நூலகர் கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாவட்ட நூலக கண்காணிப்பாளர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்