கல்லூரி மாணவி பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் ‘திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கிணற்றில் தள்ளி கொன்றேன்’ கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்
கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ‘திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கிணற்றில் தள்ளி கொன்றதாக’ காதலன் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். கச்சிராயப்பாளையம் அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வேங்கமுத்து, தொழிலாளி. இவரது மகள் வீரம்மாள் (வயது 18). இவர் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 30-ந் தேதி மாலை அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீரம்மாள் தனது பாட்டி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார்.
இதுபற்றி அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார், கிணற்றில் பிணமாக மிதந்த வீரம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜி(22) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீரம்மாளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தேன். அப்போது எனக்கும் வீரம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. வீரம்மாள் அவரது பாட்டி வீட்டுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வரும் போது, வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தேன்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீரம்மாள் எனது செலவுக்காக ரூ.2 ஆயிரம் கொடுத்தார். அந்த பணத்தை வைத்து கடந்த 30-ந் தேதி மாலை நான் எனது நண்பர்களான 17 வயதுடைய 2 சிறுவர்களுடன் மதுகுடித்தேன். அப்போது வீரம்மாள் அவரது பாட்டி வீட்டுக்கு வழக்கம் போல் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார்.
இதை பார்த்த நான் எனது நண்பர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, வீரம்மாளை அவரது பாட்டி வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது வீரம்மாள் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
இதில் ஆத்திரமடைந்த நான் அங்குள்ள கிணற்றில் அவரை தள்ளினேன். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். உடனே நான் எனது வீட்டுக்கு வந்து ஒன்றும் தெரியாதது போல் இருந்து கொண்டேன். ஆனால் போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே வீரம்மாளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து, ராஜியின் நண்பரான 17 வயது சிறுவன், தான் வீரம்மாளுடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் பரப்பியுள்ளார். அதனால் அந்த 17 வயது சிறுவனை கைது செய்ய வேண்டும், இல்லையெனில் வீரம்மாளின் உடலை வாங்க மாட்டோம் என்றனர்.
அதன் பேரில் 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.