ஆரணியில் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் ஆய்வு
ஆரணியில் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
ஆரணி,
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் உதவி ஆணையர் ஜான்சிராணி, கோட்டப் பொறியாளர் (பொறுப்பு) ராகவன், வருவாய் ஆய்வாளர் ரவிகணேசன் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து அந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளான ஆரணி புத்திரகாமேஸ்வரர் கோவில் அருகாமையில் ரூ.2½ கோடி மதிப்பிலான நவீன திருமண மண்டப பணிகளையும், ஆரணி கயிலாயநாதர் கோவிலில் ரூ.31 லட்சத்தில் நடைபெற்று வரும் தேர் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வந்தவாசியில் ரங்கநாத பெருமாள் கோவில், ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவில் ஆகிய கோவில்களுக்கு தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 2 புதிய தேர்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வந்தவாசி தவளகீர்த்தி மலைப்பாதைக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் படிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சேவூரில் விருபாட்சீஸ்வரர் சிவன் கோவிலுக்கு புதிய கொடிமரம் அமைக்கவும், சாமி வீதி உலா செல்ல புதிய சப்பரம் செய்யவும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது’ என்றார்.
அப்போது வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமால் உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.