மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை - மின்தடையால் இருளில் தவித்த மக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மின்தடையால் மக்கள் இருளில் தவித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் நேற்று இரவு 7.30 மணிக்கு பலத்த காற்று வீசியது. பின்னர் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இந்த மழை சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர் விட்டுவிட்டு சாரல் பெய்தது. இதேபோல் சாணார்பட்டி, கொசவபட்டி, தவசிமடை, வட மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் கோடைவெயிலில் ஏற்பட்ட வெப்பம் தணிந்து, இரவில் இதமான குளிர் நிலவியது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
அதேநேரம் பலத்த காற்று வீசியதால் மின்சாரம் தடை செய்யப்பட்டது. ஒருசில பகுதிகளில் 1½ மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் இருளில் தவித்தனர். திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
கொடைக்கானலில் நேற்று மாலையில் திடீரென சாரல் மழை பெய்தது. இரவு 7 மணிக்கு இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி ஆகியவற்றில் தண்ணீர் கொட்டியது.
இந்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. அதேநேரம் மழையில் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனர். பலர் குழந்தைகளுடன் நனைந்தபடியே ஏரிச்சாலையில் நடந்து சென்றனர்.
பெரும்பாறை பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் மஞ்சள்பரப்பு கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரின் வீட்டில் இருந்த டி.வி., மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. மேலும் சூறைக்காற்றில் பெரும்பாறை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன் 7-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.
இதன் காரணமாக பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புதூர், குத்துக்காடு, புல்லாவெளி, மூலக்கடை, கட்டக்காடு, வெள்ளரிக்கரை, எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கின.