டாக்டர் பயல் தற்கொலை வழக்கு: கைதான 3 டாக்டர்கள் சிறையில் அடைப்பு
டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் கைதான 3 டாக்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மும்பை,
டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் கைதான 3 டாக்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டாக்டர் தற்கொலை
மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல் (வயது26). இவர் மருத்துவ கல்லூரி விடுதி அறையில் கடந்த மாதம் 22-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். டாக்டர் பயலை சாதி ரீதியாக துன்புறுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடன் படித்து வந்த பெண் டாக்டர்களான ஹேமா, பக்தி, அங்கிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் அக்ரிபாடா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறையில் அடைப்பு
இந்தநிலையில், டாக்டர் பயல் தற்கொலை வழக்கு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் கைதான டாக்டர்கள் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். நேற்று அவர்களது போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது, குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் டாக்டர் பயல் தற்கொலை தொடர்பாக தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி கைதான டாக்டர்கள் 3 பேரையும் வருகிற 10-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் டாக்டர்கள் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.