வசாயில் பயங்கரம் திராவகம் வீசி கப்பல் என்ஜினீயர் கொலை காதலி காயம்
வசாயில் திராவகம் வீசி கப்பல் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கப்பல் என்ஜினீயரின் காதலி காயமடைந்தார்.
வசாய்,
வசாயில் திராவகம் வீசி கப்பல் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கப்பல் என்ஜினீயரின் காதலி காயமடைந்தார்.
பெண் வக்கீலுடன் காதல்
மும்பை தகிசரை சேர்ந்தவர் அவினாஷ்(வயது41). கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்தார். அப்போது, அவினாசுக்கு ஆதரவாக சீமா என்ற பெண் வக்கீல் வாதாடினார். இதில், 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஏற்கனவே கணவரை விவாகரத்து செய்து இருந்த சீமாவும், மனைவியை பிரிந்த அவினாசும் திருமணம் செய்யாமல் தகிசர் மேற்கு, கன்டர்பாடாவில் உள்ள திஷா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர்.
திராவகம் வீச்சு
சம்பவத்தன்று நள்ளிரவு 2 பேரும் இரவு உணவுக்கு வசாய் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று இருந்தனர். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். வசாய், கோட்பந்தர் ஜங்ஷனில் சிக்னலுக்காக நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவன் திடீரென என்ஜினீயர் அவினாஷ் மீது தான் பாட்டிலில் வைத்திருந்த திராவகத்தை எடுத்து வீசினான்.
இதில், திராவகம் அவினாஷ் மற்றும் அவரது காதலி சீமா மீதும் பட்டது. இதில் உடல் வெந்து 2 பேரும் வலியால் அலறி துடித்தனர்.
என்ஜினீயர் பலி
அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு காந்திவிலி சதாப்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அவினாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முகம், கையில் லேசான காயமடைந்த சீமா சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வாலிவ் போலீசார் என்ஜினீயர் மற்றும் அவரது காதலி மீது திராவகம் வீசிய மர்மநபர் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.