ஆந்திராவில் இருந்து சரக்குரெயிலில் 3,198 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது

ஆந்திராவில் இருந்து சரக்குரெயிலில் 3,198 டன் யூரியா உரம் தஞ்சைக்கு வந்தது.

Update: 2019-05-31 22:00 GMT
தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. தற்போது மேட்டூர் அணையில் 46 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை.

இதனால் ஆற்றுப்பாசனம் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆற்றுப்பாசனத்தை நம்பாமல் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். விதைநெல் தூவி நாற்றுக்களை வளர்த்து வருகின்றனர். பல இடங்களில் நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும்.

இதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து 3,198 டன் யூரியா உரம் சரக்கு ரெயிலின் 58 வேகன்கள் மூலம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்