புதுச்சத்திரம் அருகே விவசாயியை மிரட்டி நகை, பணத்தை கொள்ளை அடித்த 4 பேர் கைது
புதுச்சத்திரம் அருகே விவசாயியை மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மோகனூர் அருகே அரசு பள்ளியில் கணினி திருடிச்சென்ற இருவரும் வாகன சோதனையில் சிக்கினர்.
நாமக்கல்,
நாமக்கல் தாலுகா புதுச்சத்திரம் அருகே உள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67), விவசாயி. கடந்த மே மாதம் 2-ந் தேதி 3 மர்ம நபர்கள் பெரியசாமி மற்றும் அவரது மனைவி சரசுவை மிரட்டி பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதையடுத்து பெரியசாமி புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே நேற்று அதிகாலை புதுச்சத்திரம் - பிடாரிபட்டி சாலையில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அந்த பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் சிவசக்தி என்ற சக்திவேல் (38), கொண்டலாம்பட்டி அடுத்த தம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள தீரானூரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கார்த்தி (26), காடையாம்பட்டியை சேர்ந்த எல்லப்பன் மகன் டீயூக் அருள் என்ற அருள்மணி (24) ஆகியோர் என்பதும், மூவரும் பெரியசாமி வீட்டில் 4 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது.
மேலும் எடப்பாடி அருகே உள்ள வேம்பனேரியை சேர்ந்த சின்னப்பன் மகன் மணி (48), குள்ளப்பநாயக்கன்பட்டிக்கு கரும்பு வெட்ட வந்தபோது பெரியசாமியின் வீட்டை நோட்டமிட்டு அவர்கள் மூவருக்கும் தகவல் அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கார்த்தி, அருள்மணி ஆகியோர் வேறு ஒரு கும்பலுடன் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதேபோல் நேற்று முன்தினம் மோகனூர் வாங்கல் பிரிவு அருகே சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பாஷா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோகனூர் அருகே உள்ள ஆண்டாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் கணினி திருடிச்சென்ற திருச்செங்கோடு அருகே உள்ள தொண்டிப்பட்டிபுதூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் கெயின் மோகனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மோகன், பூபதி என்பவருடன் சேர்ந்து கணினியை திருடியதோடு ரூ.15 ஆயிரத்திற்கு அதை விற்றதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களை பிடித்த போலீசாரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.