செங்கோட்டை அருகே விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
செங்கோட்டை அருகே விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் 50 தென்னை மரங்கள் சேதம் அடைந்தன.
செங்கோட்டை,
செங்கோட்டை அருகே விளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதில் 50 தென்னை மரங்கள் சேதம் அடைந்தன.
விளைநிலங்களில் புகுந்த யானைகள்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானை, கரடி, புலி, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடையை முன்னிட்டு, வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், குடிநீர் மற்றும் உணவைத் தேடி, வனவிலங்குகள் மலைடியவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்து விடுகின்றன.
அதேபோன்று நேற்று முன்தினம் இரவில் செங்கோட்டை அருகே மோட்டை நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள உருட்டுதேரி வகாப் தோட்டம், செட்டியார் காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் குடிநீர் மற்றும் உணவைத்தேடி யானைகள் கூட்டமாக புகுந்தன.
தென்னை மரங்கள் சேதம்
அங்கிருந்த தென்னை மரங்கள், பாக்கு மரங்களை வேருடன் யானைகள் பிடுங்கி எறிந்தன. மாமரங்களின் கிளைகளையும் முறித்து சேதப்படுத்தின. மேலும் அங்கிருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும் உடைத்து சேதப்படுத்தின. இதில் சுமார் 50 தென்னை மரங்கள், 20 பாக்கு மரங்கள், 5 மாமரங்கள் சேதம் அடைந்தன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். எனவே சேதம் அடைந்த மரங்களுக்கு அரசு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். விளைநிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.