குப்பை தொட்டி வைக்காத வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம்; உள்ளாட்சித்துறை இயக்குனர் எச்சரிக்கை
குப்பை தொட்டி வைக்காத வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
புதுச்சேரி,
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட முதன்மை சாலைகளின் தூய்மையை பராமரிப்பது தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆணையர் கந்தசாமி தலைமை தாங்கினார். உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் கூட்டத்தில் கலந்துகொண்டு சில வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக உழவர்கரை முதன்மை சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் உருவாகும் குப்பையை கையாளுவதை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இயக்குனர் மலர்க்கண்ணன் உத்தரவிட்டார்.
* துப்புரவு மேஸ்திரிகள் நிலை–2 (பொறுப்பு) மற்றும் வரி தண்டலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இயங்கும் அனைத்து வணிக, வர்த்தக நிறுவனங்களும் மற்றும் தெருவோர கடைகளும் தங்களுக்கென்று ஒரு குப்பை தொட்டியை வைத்து தமது நிறுவனங்களின் குப்பைகளை உழவர்கரை நகராட்சி பகுதிகளில் குப்பை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களிடம் அளிக்கவேண்டும். இப்பணிகள் சரிவர செய்யப்படுகிறதா? என்பதை மேற்பார்வையிட வேண்டும்.
* வணிக, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நடைபாதை கடைகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
* நகராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டுமான கழிவுகள், பொருட்களை பொது இடம் மற்றும் சாலைகளில் வைத்திருப்போரை கண்டறிந்து அபராதம் விதிக்கவேண்டும். கட்டுமான கழிவுகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள கட்டுமான கழிவு குப்பை கிடங்கில் (கனரக வாகன ஊர்தி முனையம் அருகில்) கொட்ட அறிவுறுத்த வேண்டும்.
* சுகாதார ஆய்வாளர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள முதன்மை சாலைகளில் காலை நேரத்தில் ஆய்வு செய்து முதல் நாள் இரவு தூய்மை பணி சரிவர மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என கண்டறிய வேண்டும்.
* மேற்கண்ட இந்த நடைமுறைகளை பின்பற்றாத வணிக, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நடைபாதை கடைகளுக்கு துப்புரவு ஆய்வாளர் முதல் முறையாக அபராதம் விதிக்கவேண்டும். தொடர்ந்து அந்நிறுவனங்கள் நடைமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்க நகராட்சி இளநிலை பொறியாளரிடம் (சுகாதாரம்) துப்புரவு ஆய்வாளர் தெரியப்படுத்த வேண்டும்.
* துப்புரவு மேஸ்திரி நிலை–2 (பொறுப்பு) மற்றும் வரி தண்டலர்கள் தங்களின் தினசரி பணி அறிக்கையை துப்புரவு ஆய்வாளரிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும். துப்புரவு ஆய்வாளர்கள் அந்த அறிக்கையை ஆய்வு செய்து இளநிலை பொறியாளரிடம் (சுகாதாரம்) அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.