லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி இரும்பு வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
பட்டுக்கோட்டையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி இரும்பு வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாமியார்மடம் அருகே பழைய இரும்பு சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருபவர் ரமேஷ்(வயது 43). இவர் நேற்று காலை வழக்கம்போல் வியாபாரத்திற்காக தனது கடையை திறந்து வைத்து இருந்தார். அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவர், நான் மின்வாரிய துறையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். மின்வாரியத்திற்கு சொந்தமான பொருட்களை திருடிக்கொண்டு வருபவர்களிடம் நீங்கள் வாங்கி விற்பதாக எனக்கு புகார் வந்துள்ளது. ஆதலால் கடையை சோதனை செய்து, உங்களிடம் விசாரணை நடத்த வந்துள்ளேன் என கூறினார்.
அதற்கு ரமேஷ், நான் பழைய இரும்பு சாமான்களை மட்டும்தான் வாங்கி விற்கிறேன். மின்வாரியம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவதில்லை என கூறினார்.
அதற்கு அவர், உங்கள் மீது வழக்கு போட வேண்டாம் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு ரமேஷ், இப்போதுதான் நான் கடையை திறந்து வைத்து உள்ளேன். என்னிடம் ரூ.1000 மட்டுமே உள்ளது என கூறி, அந்த தொகையை கொடுத்துள்ளார்.
அந்த நபர் ரமேஷ் கொடுத்த ரூ.1000-ஐ வாங்யுள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த ரமேஷ், இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், மன்னார்குடி அருகே உள்ள கர்ணாவூர் கிராமத்தை சேர்ந்த அருள்மோகன்ராஜ்(29) என்பதும், இவர் அதிகாரி போல நடித்து பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்மோகன்ராஜை கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரி என கூறி நடித்து இரும்பு வியாபாரியிடம் பணம் பறித்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.