பரமக்குடி தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. பேட்டி

பரமக்குடி தொகுதி முழுவதும் தொட்டிகள் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2019-05-31 23:00 GMT

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் நகர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. ஆணையாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பொறியாளர் வரதராஜன் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அதன்பின்னர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, பரமக்குடி நகராட்சி முதல்நிலை மற்றும் முன்மாதிரியான நகராட்சியாக திகழ்கிறது. அந்த நிலை தொடர வேண்டும். மக்கள் பணியையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும். அரசின் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று விரும்பி மக்கள் வாக்களித்துள்ளனர். பொதுமக்கள் அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற அனைவரும் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மேலாளர் ராஜேசுவரி, வருவாய் ஆய்வாளர் பெ.ராஜேசுவரி, சுகாதாரத்துறை அதிகாரி சண்முகவேலு, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் அப்துல் மாலிக், கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல் முருகன், ஒன்றிய செயலாளர்கள் நாகநாதன், குப்புச்சாமி, வீட்டு வசதி சங்க தலைவர்கள் திசைநாதன், திலகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சரயு ராஜேந்திரன், பருத்தியூர் நடராஜன், தொழிற்சங்க செயலாளர் பிரகாசம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், மணிவாசகம், நகர் துணை செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:– பரமக்குடி தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்து கிராமங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காவிரி கூட்டு குடிநீர் தங்கு தடையின்றி முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கச்செய்வேன். பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வைகை கரையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படும். நகராட்சியின் மூலம் புதிதாக 2 மேல்நிலைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது மாவட்டத்திற்கான உரிமையின்படி ஆண்டுதோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்கள் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து நிவர்த்தி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்