மகப்பேறு நிதி உதவி வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய நர்சு கைது
வேலூர் அருகே மகப்பேறு நிதி உதவி வழங்குவதற்கு ரூ.1,000 லஞ்சம் வாங்கிய ஆரம்ப சுகாதார நிலைய நர்சு, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த பென்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவருடைய மனைவி வினிதா, தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதற்காக சோழவரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். அவர் தமிழக அரசு வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி பெறுவதற்கும் விண்ணப்பித்துள்ளார்.
இதில் அவருக்கு முதல் தவணை நிதி உதவி வந்து விட்டது. இரண்டாவது கட்ட நிதி உதவி பெறுவதற்காக சோழவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கணவர் நவீன்குமாருடன் சென்றார். அங்கு நர்சாக வேலைபார்க்கும் லதாவை, வினிதாவின் கணவர் நவீன்குமார் அணுகி உள்ளார். கர்ப்பிணிகள், மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது அவர்களுக்கு 14 எண்கள் கொண்ட அட்டை வழங்கப்படும்.
இந்த எண்ணை இணையதளத்தில் பதிவு செய்தால்தான் குழந்தை பிறந்த பிறகு பிறப்பு சான்றிதழ் பெற முடியும். இது குறித்து நர்சு லதாவிடம் நவீன்குமார் கேட்டுள்ளார். இதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று லதா கூறியிருக்கிறார். ஆனால் அவ்வளவு தொகையை தன்னால் தர முடியாது. எனவே ரூ.1,000 தருகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு நர்சு லதா சம்மதம் தெரிவித்துள்ளார்.
எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத நவீன்குமார் அதுகுறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் நேற்று போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய்நோட்டை நவீன்குமாரிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
அவர் அதனை சோழவரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் இருந்த நர்சு லதாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையிலான போலீசார் சென்று லதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.