டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் மாநில மாநாட்டில் தீர்மானம்
டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், என்று டாஸ்மாக் பணியாளர் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம்,
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில மாநாடு நேற்று சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். திருமுருகன் வரவேற்றுப்பேசினார். மாநில பொதுச்செயலாளர் கோபிநாத், தலைவர் சிவகுமார், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இந்த மாநாட்டில், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பணி விதிகள் உருவாக்க வேண்டும். ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், ஓட்டுனர், உதவியாளர் ஆகிய பணிகளுக்கு, டாஸ்மாக் பணியாளர்களை பணி மூப்பு அடிப்படையில் அமர்த்த வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போன்ற மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். சென்னை போன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேரடியாக சென்று பணத்தை வசூல் செய்ய வேண்டும்.
வழிப்பறி கொள்ளையர்களால், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் பிற துறைகளில் பணியமர்த்தும்போது டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய, பணிகாலத்தை ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர் நலத்துறை, கலால் துறை அதிகாரிகள், டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்வதை தடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.