கொடைக்கானல் மலைப்பகுதியில், போர் விமானம் வட்டமடித்ததால் பரபரப்பு
கொடைக்கானல் மலைப்பகுதியில் போர் விமானம் வட்டமடித்ததால் பர பரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் நேற்று முன்தினம் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா தொடங்கியது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுக்கின்றனர்.
இந்த நிலையில் கொடைக் கானல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும் நேற்று காலை 9.30 மணி அளவில் வானத்தில் விமானம் பறக்கும் பயங்கர சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த பொதுமக்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் வெளியே வந்து பார்த்தனர்.
ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் விமானத்தை சரியாக பார்க்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மேகக்கூட்டம் விலகியதால் விமானம் தெரிய தொடங்கியது. வழக்கமான பயணிகள் விமானம் அல்லது ஹெலிகாப்டர் போல் அல்லாமல் முன்பகுதி கூர்மையாக இருந்தது.
இதனால் அது போர் விமானமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுமார் 20 நிமிடம் தாழ்வாக பறந்தவாறு அந்த விமானம் மலைப்பகுதியில் வட்டமடித்தது. அந்த விமானம் எதற்காக பறந்தது அது போர் விமானமா? என்பது உறுதிபடுத்த முடியவில்லை.
கொடைக்கானல் மலைப்பகுதியில் விமானம் பறப்பது என்பது அரிது என்ற நிலையில் நேற்று விமானம் தாழ்வாக பறந்தது கொடைக் கானல் மக்களிடையே பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.