தீவுகளை சுற்றிலும் மிதவை அமைப்பு; கடல் தொழிலாளர்கள் எதிர்ப்பு

தீவுகளை சுற்றிலும் மிதவை அமைத்ததற்கு கடல் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2019-05-31 22:30 GMT

ராமேசுவரம்,

பாம்பன் ஊராட்சி தோப்புக்காடு மீனவ கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் கடல்தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மன்னார் வளைகுடா தீவுகளில் குருசடை தீவை மையப்படுத்தி 4 தீவுகளுக்கு பைபர் படகுகளில் வனத்துறை நிர்வாகம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதை பயன்படுத்தி வனத்துறை சார்பில் தீவுகளை சுற்றிலும் மிதவைகளை போட்டுள்ளது.

மேலும் இந்த மிதவைகளை தாண்டி மீனவர்கள் வரக்கூடாது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தீவுகளை நம்பி காலம்காலமாக மீன்பிடித்தும், கடல்பாசி எடுத்தும் வாழ்ந்து வரும் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இது இன்னும் அடுத்தடுத்த தீவு பகுதிகளுக்கும் தொடரும் அபாயம் உள்ளது. இதனால் மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, சீனியப்பா தர்கா, பெரியபட்டணம், களிமண்குண்டு, கீழக்கரை, ஏர்வாடி, முந்தல், வாலிநோக்கம் என மாவட்டம் முழுவதும் கடல் பகுதி கிராம மீனவ மக்கள் இதே பாதிப்பை சந்திக்க நேரிடும்.

எனவே இதற்கு எதிராக மாவட்டம் முழுவதும் மீனவ மக்களை திரட்டி வருகிற 7–ந்தேதி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் தங்களின் மீன்பிடி வலைகள் மற்றும் மீனவர் அடையாள அட்டை, ரே‌ஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தையும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தும், தட்டேந்தி பிச்சையெடுத்து காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்