வேப்பனப்பள்ளி தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2019-05-31 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் (தி.மு.க.) நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம் ஒன்றியத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று வரும் நிலையில் உள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே, குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில் பகுதி நேர ரே‌‌ஷன் கடைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து கால்வாய் மூலம் துரைஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொட்டிநாயக்கனஹள்ளி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிராம மக்கள் மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப முடிவு செய்துள்ளனர். அதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரபாகர், கோரிக்கைகளை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது கெலமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் சின்னராஜ், சதாசிவம், சிவக்குமார், ராயக்கோட்டை சந்திரன், செல்வம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்