மாரண்டஅள்ளி அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கட்டிட தொழிலாளி பிணம்
மாரண்டஅள்ளி அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கட்டிட தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள தெல்லக்காது நடுத்திட்டு காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடந்த வாலிபர் மாரண்டஅள்ளி அருகே உள்ள பெரியதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் மகன் மாரியப்பன் (வயது 20) என்பதும், கட்டிட தொழிலாளியான இவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாரியப்பனின் உடலை அடையாளம் காட்டினர்.
இதையடுத்து போலீசார், மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு செல்வதாக கூறி சென்ற கட்டிட தொழிலாளி அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.