தொடர்மழை எதிரொலி: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை எதிரொலியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஓசூர்,
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்தி மலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும், ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர்மழையாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 41.98 அடிநீர் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று, அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 720 கன அடி என்றிருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி முழுமையாக 720 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது.
வினாடிக்கு 720 கன அடி நீர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பேரண்டபள்ளி, கோபசந்திரம், பாத்தகோட்டா உள்ளிட்ட பாலங்கள் வழியாக கெலவரப்பள்ளி அணை நீர், தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்தோடியது. மேலும், கரையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக பகுதிகளிலிருந்து கெலவரப்பள்ளி அணைக்கு வரும் மழைநீரில், தனியார் தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுவதால், மழைநீர் கருமை நிறத்தில் அதிக நுரையுடன் ஆற்றுக்கு வந்தவாறு உள்ளது.