கடந்த நிதியாண்டில், என்.எல்.சி. நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,267 கோடி - ராக்கேஷ்குமார் தகவல்

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஈட்டிய நிகரலாபம் ரூ.1,267 கோடி என்று அதன் தலைவர் ராக்கேஷ்குமார் தெரிவித்தார்.;

Update: 2019-05-31 22:30 GMT
நெய்வேலி,

நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 2018-19-ம் ஆண்டில் நிதி மற்றும் மின் உற்பத்தி குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி 31-3-2019 அன்றுடன் நிறைவடைந்த (2018-19) நிதியாண்டில் மின் உற்பத்தியை பொறுத்தவரையில் இந்நிறுவனம் 2,067 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2017-18) இந்நிறுவனம் மேற்கொண்ட மின் உற்பத்தி அளவு 2074 கோடியே 10 லட்சம் யூனிட்டுகள் ஆகும். ஆனால், மின்சக்தி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2017-18-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்த அளவான 1,741 கோடியே 90 லட்சம் யூனிட்டை விட அதிகமாக, கடந்த நிதியாண்டில் 1750 கோடியே 50 லட்சம் யூனிட் ஏற்றுமதி செய்துள்ளது.

அதேபோல் பழுப்பு நிலக்கரியை பொறுத்தவரை 2018-19ல் ரூ.579 கோடியே 28 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 55 சதவீதம் அதிகமாகும். அதாவது 2017-18-ல் ரூ.372 கோடியே 57 லட்சத்திற்கே பழுப்பு நிலக்கரி விற்பனை செய்யப்பட்டிருந்தது. மேலும் புதிய திட்டங்களை அமைக்க, ரூ.7111 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் உற்பத்தி செய்த 2,067 கோடியே 70 லட்சம் யூனிட் மின்சாரத்தில் 58 கோடியே 50 லட்சம் யூனிட்டுகள் பசுமை மின்னாற்றல் எனப்படும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும். முந்தைய நிதியாண்டில் பசுமை மின்சக்தியில் 20 கோடி யூனிட்டுகளே உற்பத்தி செய்யப்பட்டது.

மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மின்சக்தியை அவை பயன்படுத்தாமல் விடுவதால் ஏற்படும் உற்பத்தி இழப்பும் இந்த நிதி ஆண்டில் குறைந்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில், நிறுவனம் ரூ.9083 கோடியே 5 லட்சத்தை மொத்த வருவாயாக ஈட்டியிருந்ததது. தற்போது ரூ.8059 கோடியே 27 லட்சத்தை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.

இது உற்பத்திக் குறைவினால் ஏற்பட்ட பாதிப்பு இல்லை எனவும், பழுப்பு நிலக்கரியின் விற்பனை விலையை குறைந்த வகையில் ரூ.420 கோடியும், இந்திய கணக்கியல் நடைமுறைகள் 115-ஐ அமல்படுத்தியதன் மூலம் ரூ.658 கோடியும், பசுமை வரியை நீக்கியதன் மூலம் ரூ.220 கோடியும் என மொத்தத்தில் ரூ.1298 கோடி, இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுடன் தொடர்பில்லாமல், வருவாய் குறைந்துள்ளது.

2017-18-ல் இந்நிறுவனம், ரூ.1,848 கோடியே 78 லட்சத்தை நிகர லாபமாக பெற்றிருந்த நிலையில், தற்போது ரூ.1266 கோடியே 97 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. மின் நிலையங்களின் பல உற்பத்தி பிரிவுகள் உற்பத்தி செய்யும் நிலையில் இல்லாததாலும், பழுப்பு நிலக்கரி கையிருப்பு குறைவாக இருந்ததாலும், விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்கு பணப்பயன் வழங்கியதாலும் இந்நிறுவனத்தின் கடந்த நிதியாண்டிற்கான நிகர லாபத்தில் சிறிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் என்.எல்.சி. நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்