சுப்ரமணியசிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1 லட்சம் டன் கரும்பு அறுவடை செய்ய இலக்கு

சுப்பிரமணியசிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1 லட்சத்து 15 ஆயிரம் டன் கரும்பு அறுவடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மேலாண்மை இயக்குனர் கீர்த்தி பிரியதர்சினி கூறினார்.;

Update: 2019-05-31 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான அரவை பருவம் முடிவடைந்தது. இந்த ஆலையில் 2018-2019-ம் ஆண்டின் அரவை பருவத்தில் 2,26,121 டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டது. 2,40,070 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 256 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கரும்பு வெட்டும் பணியில் 186 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக விவசாயிகள், பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய ஆலையின் மேலாண்மை இயக்குனர் கீர்த்தி பிரியதர்சினி, ஆலை அரவை பணி சிறப்பாக நடைபெற முழு ஆதரவளித்த கரும்பு விவசாயிகள், வாகன உரிமையாளர்கள், வாகன டிரைவர்கள், கரும்புவெட்டும் குழுக்களை சேர்ந்த தொழிலாளர்கள், கரும்பு அலுவலர்கள், கரும்பு களப்பணியாளர்கள், ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2019-2020-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கான நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. 1 லட்சத்து 15 ஆயிரம் டன் கரும்பு அறுவடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் பணிகளுக்கான வேலையாட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் கரும்பு வெட்டும் எந்திரம் ஆலையின் அங்கத்தினருக்கு தமிழக அரசின் மானிய உதவியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

சொட்டுநீர்பாசன கருவிகள், உழவுக்கருவிகள், களை எடுக்கும் கருவிகள் மற்றும் கரும்பு சோகை தூளாக்கும் எந்திரம் உள்ளிட்ட விவசாய கருவிகள் தமிழக அரசின் மானிய உதவியின் மூலம் ஆலையின் அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த கருவிகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்