மேடவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை அதிகாரிகளுடன் வாக்குவாதம்

குடிநீர் கேட்டு மேடவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-31 00:23 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மேடவாக்கம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள்.

இந்த ஊராட்சியில் வசிப்பவர்களுக்கு வீட்டு குழாய் இணைப்பு மற்றும் தெரு குழாய்கள் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இப்பகுதி மக்கள் உபயோகித்து வந்தனர்.

ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் குழாயில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் இந்த பகுதி மக்கள், தங்கள் தேவைக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாததால் தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி மேடவாக்கம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், ஊராட்சி அதிகாரிகளையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களுக்கு குழாய்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய ஊராட்சி அதிகாரிகள், முற்றுகையில் ஈடுபட்ட பெண்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

மேலும் செய்திகள்