சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் திட்டங்கள் குறித்து வக்கீல்கள், சட்ட சேவை உறுப்பினர்களுக்கு பயிற்சி

சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் திட்டங்கள் குறித்து வக்கீல்கள், சட்ட சேவை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2019-05-30 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல்கள், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள் மற்றும் தன்னார்வ சட்ட சேவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் திட்டங்களை எவ்வாறு திறம்பட செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆனந்தி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் நீதிபதி ஜமுனா, தலைமை குற்றவியல் நீதிபதி காந்தி, முதன்மை சார்பு நீதிபதி (பொறுப்பு) ஜெயமங்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் ராஜசேகர் கலந்துகொண்டு தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து வக்கீல்களுக்கு கருத்துரை வழங்கி பேசினார். அவரை தொடர்ந்து துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, தன்னார்வ சட்ட சேவை உறுப்பினர்களுக்கு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பயிற்சி அளித்தார்.

இதில் வக்கீல்கள், சட்ட சேவை உறுப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்