முதல்-அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள் காங்கிரசார் நலத்திட்டம் வழங்கி கொண்டாட்டம்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாளை காங்கிரசார் நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடினார்கள்.
புதுச்சேரி,
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நேற்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை காங்கிரசார் சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி காலையில் மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு பூஜை நடைபெற் றது. தொடர்ந்து அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் தலைமையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் நீல.கங்காதரன், ஏ.கே.டி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் பிரமுகர் ஏழுமலை என்ற காசிலிங்கம், உமாசங்கர் ஆகியோர் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கினார்கள். ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் தலைவர் வேல் முருகன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவி பிரேமலதா, ஆல்பா கல்வி நிறுவனங் களின் தலைவர் பாஷிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் முதல் - அமைச்சர் நாராயணசாமியின் வீட் டருகே டாக்டர் விஜயகுமாரி தலைமையில் அன்னதானத்தையும் வேல்முருகன் வழங்கினார்.
ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கம் நான்குமுனை சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விக்னேஷ், தெற்கு மாவட்ட பொருளாளர் குமரேஸ்வரன் ஆகியோர் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார். இதேபோல் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் பிறந்தநாளை காங்கிரசார் கோலாகலமாக கொண்டாடினார்கள். அப்போது ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.