மும்பையில் அதிர்வலையை ஏற்படுத்திய பெண் டாக்டர் தற்கொலை வழக்கு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றம்
மும்பையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள பெண் டாக்டர் பயல் தற்கொலை வழக்கு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள பெண் டாக்டர் பயல் தற்கொலை வழக்கு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
பெண் டாக்டர் தற்கொலை
மும்பை நாயர் ஆஸ்பத்திரியில் மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல்(வயது26). இவர் மருத்துவ கல்லூரி விடுதி அறையில் சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மும்பையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர் பயலை அவரது சீனியர் மாணவர்களான டாக்டர்கள் ஹேமா, பக்தி, அங்கிதா ஆகியோர் சாதி ரீதியாக துன்புறுத்தி வந்ததும், இதனால் மனமுடைந்து பயல் தற்கொலை செய்து கொண்டதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீசார் 3 பெண் டாக்டர்கள் மீதும் பயலை தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் அக்ரிபாடா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது
டாக்டர் பயலை தற்கொலைக்கு காரணமான டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் நாயர் ஆஸ்பத்திரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பயல் தற்கொலை வழக்கில் தொடர்புடைய 3 டாக்டர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
போலீசார் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
குற்றப்பிரிவுக்கு மாற்றம்
இந்தநிலையில், டாக்டர் பயல் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரது வக்கீல் நிதின் சத்புத்தே போலீசில் கூறினார். இந்த வழக்கை அக்ரிபாடா போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. எனவே வழக்கை சி.பி.ஐ. அல்லது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும், என்றார்.
இதையடுத்து, டாக்டர் பயல் தற்கொலை வழக்கு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.
இதுபற்றி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் மஞ்சுநாத் சிங்க்டே கூறுகையில், இந்த வழக்கின் தீவிரம் மற்றும் முக்கியவத்தை கருத்தில் கொண்டு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது, என்றார்.