மூளைச்சாவு அடைந்த 12-ம் வகுப்பு மாணவரின் உடல் உறுப்புகள் தானம் 8 மாத குழந்தை உள்பட 5 பேருக்கு மறுவாழ்வு
மூளைச்சாவு அடைந்த 12-ம் வகுப்பு மாணவரின் உடல் உறுப்பு தானத்தால் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
மும்பை,
மூளைச்சாவு அடைந்த 12-ம் வகுப்பு மாணவரின் உடல் உறுப்பு தானத்தால் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
மூளைச்சாவு
மும்பை ஒர்லி பி.பி.டி. சால் பகுதியை சேர்ந்தவர் ஓம்கார்(வயது17). 12-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த ஓம்கார் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி குளிக்க சென்ற ஓம்கார் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில், தலையில் படுகாயம் அடைந்து மயங்கிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக பரேலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ஓம்காரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் 27-ந்தேதி மாணவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
உடல் உறுப்பு தானம்
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து மாணவரின் உடல் உறுப்புகளை அகற்றினர்.
இதில், மாணவரின் கல்லீரலின் ஒரு பகுதி 8 மாத பெண் குழந்தைக்கும், மற்றொரு பகுதி 16 வயது இளம்பெண்ணுக்கும் பொருத்தப்பட்டது. இருதயம் கொல்கத்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும், சிறுநீரகங்கள் மும்பையில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மாணவர் ஓம்காரின் உடல் உறுப்பு தானத்தால் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் மறுவாழ்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் மாணவன் ஓம்கார் 65 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.