காட்பாடி ரெயில் நிலையத்தில் ரூ.12 லட்சம் கஞ்சா கைப்பற்றப்பட்டது
காட்பாடி ரெயில் நிலையத்தில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
காட்பாடி,
காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீரங்கநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது 5-வது பிளாட்பாரத்தில் பயணிகள் அமரும் இருக்கைகளுக்கு கீழே கேட்பாரற்ற நிலையில் 2 பைகள் கிடந்தன. இதைப்பார்த்த போலீசார் சந்தேகமடைந்து பைகளை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை கைப்பற்றி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறுகையில், “ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 22 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக கஞ்சா கொண்டு வரப்பட்டதா? அல்லது ரெயில்களில் கடத்தி வந்து இங்கு பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது குறித்து தெரியவில்லை.
கஞ்சாவை இங்கு வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.