ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஈரோட்டில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் பணத்தை எடுக்க முடியாமல் திரும்பிச்சென்றார். இதனால் ரூ.4 லட்சம் தப்பியது.

Update: 2019-05-30 22:45 GMT
ஈரோட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஈரோடு, 

ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு அருகில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை ஒருவர் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வங்கியின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வங்கி ஊழியர்கள் அங்கு விரைந்தனர். மேலும், தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் ஹெல்மெட் அணிந்தபடி மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைவதும், பின்னர் அவர் பணத்தை கொள்ளையடிப்பதற்காக ஒரு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதும் தெரிந்தது. ஆனால் அந்த நபரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அந்த நபர், கொள்ளையடிக்கும் முடிவை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.4 லட்சம் தப்பியது.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்