குமரி இளம்பெண் கடத்தல்: போலீஸ்காரரிடம் விசாரணை

குமரி இளம்பெண் கடத்தப்பட்டது தொடர்பாக சென்னை போலீஸ்காரரை கருங்கல் அழைத்து வந்து போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-05-30 22:15 GMT
கருங்கல்,

கருங்கல் பகுதியை சேர்ந்த பெற்றோரை இழந்த இளம்பெண் ஒருவர் உறவினர் பராமரிப்பில் வசித்து வந்தார். அவர் அருகில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் இளம்பெண்ணை சென்னையில் டிரைவராக வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பெண் பார்த்து விட்டு சென்றார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற இளம்பெண், தன்னை பெண் பார்க்க வந்த வாலிபரை சந்திக்க விரும்பி, சென்னைக்கு தனியாக சென்றார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய அவர், சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் மூலம் வாலிபரிடம் பேசினார். அப்போது, அந்த வாலிபர் தான் வெளியூரில் இருப்பதாக கூறி இளம்பெண்ணை ஊருக்கு செல்லும்படி கூறினார். மறுநாள் அந்த வாலிபர் குமரியில் உள்ள இளம்பெண்ணின் உறவினர்களுக்கு தகவலை கூறியபோது தான் இளம்பெண் ஊர் திரும்பாதது தெரியவந்தது.

போலீஸ்காரருக்கு தொடர்பு

இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுபற்றி கருங்கல் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளித்தனர். அதைதொடர்ந்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரெகுபாலாஜி தலைமையிலான போலீசார் சென்னை சென்று வாலிபரிடமும், இளம்பெண் பேச உதவிய சென்னை பெண்ணின் போன் நம்பர் மூலம் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குமரி இளம்பெண் கடத்தப்பட்டதும், அதில் ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் சென்னை பெண்ணையும், அந்த போலீஸ்காரரையும் பிடித்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விரைந்து வந்து பிடிபட்ட பெண் மற்றும் போலீஸ்காரரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்