தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது.

Update: 2019-05-30 23:00 GMT
ஈரோடு, 

பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறையின் சார்பில், தென் மேற்கு பருவமழையின் போது வெள்ளம், புயல், மழையினால் ஏற்படும் பேரிடர்களை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய ஒவ்வொரு ஆண்டும் பேரிடர் காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்துடன் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து பேரிடர் காலங்களில் பணியாற்ற வேண்டும்.

அதன்படி வருவாய்த்துறையினர் ஆற்றின் கரையோரங்களில் உள்ள குடியிருப்புதாரர்களை கண்காணித்து வெள்ளம் வரும் காலங்களில் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தென்மேற்கு பருவ மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதி மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான கருவி மற்றும் உபகரணங்களை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். மீட்புப்பணி தொடர்பான ஒத்திகை பயிற்சி பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் செய்து காண்பிக்க வேண்டும்.

மழைநீர் சூழ்ந்து நீர் வடியாமல் இருக்கும் பகுதிகளை மின்சாரத்துறையினர் பார்வையிட்டு உடனடியாக மின்சாரத்தை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பலத்த காற்று மற்றும் மழையினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவற்றை சரி செய்ய தேவையான பணியாளர் குழுக்களின் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுப்பணித்துறையினர் மழை வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளுக்கு தேவையான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் தென்மேற்கு பருவமழையின் போது சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் மின்விளக்குகள் ஆகியவற்றை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மரங்களை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களை போதிய அளவு வைத்திருக்க வேண்டும்.

உணவுப்பொருள் வழங்கு துறை அவசரகால நிகழ்வுகளை எதிர்கொள்ள தேவையான அளவு உணவுப்பொருட்கள், மண்எண்ணெய் ஆகியவைகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மலை பிரதேசங்களில் உள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். இவற்றில் உடைப்புகள் ஏற்படும் நேரங்களில் அதனை அடைக்க தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கல்வி துறையினர் பேரிடர் காலங்களில் முகாம் அமைக்க ஏதுவாக விடுதிகள் மற்றும் பள்ளிக்கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சுகாதாரத்துறையினர் தொற்றுநோய்கள் ஏற்படா வண்ணம் உரிய மருந்துகளை போதிய அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையினர் கால்நடை நோய் தடுப்பு மருந்துகள், தீவனங்கள் போதிய அளவு உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறை, நீர்வள ஆதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் என அனைவரும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பணைகள், குளங்கள் மற்றும் பல்வேறு வகையான நீர் தேக்கங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தில் அனைத்து அலுவலர்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களில் மாறுதல் இருந்தால் உடனடியாக மாற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்ப வேண்டும். தென்மேற்கு பருவ மழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

எனவே தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் இயற்கை இன்னல்களை அனைத்து துறை அலுவலர்களும் மற்றும் களப்பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணே‌‌ஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்