பழைய ஜெயங்கொண்டத்தில் குடிநீர்கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போக்குவரத்து பாதிப்பு

பழைய ஜெயங்கொண்டத்தில், குடிநீர்கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-30 22:45 GMT
லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூவம்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதமாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்ட கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பூவம்பாடி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள நால்ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பழனி, பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் பழைய ஜெயங்கொண்டத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்