யூனிட் ஒன்றுக்கு 33 பைசா அதிகரிப்பு கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீர் உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முன்தேதியிட்டு அமல்
கர்நாடகத்தில் மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 33 பைசா உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின்கட்டண அமல் ஏப்ரல் 1-ந்தேதி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 33 பைசா உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின்கட்டண அமல் ஏப்ரல் 1-ந்தேதி முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.
5 மின்சார நிறுவனங்கள்
இதுகுறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சம்புதயாள் மீனா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு பகுதியில் ‘ெபஸ்காம்’ (பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம்), மைசூரு பகுதியில் (செஸ்காம்), மங்களூரு பகுதியில் மெஸ்காம், உப்பள்ளி பகுதியில் ஹெஸ்காம், கலபுரகி பகுதியில் ஜெஸ்காம் என்ற பெயர்களில் மொத்தம் 5 மின்சார வினியோக நிறுவனங்கள் உள்ளன.
ஊதிய உயர்வு
இந்த நிறுவனங்களின் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. சராசரியாக 22 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.
முதலீடு செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக ரூ.48 ஆயிரத்து 760 கோடி நிதி ேதவைப்படுகிறது. அதனால் மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாயில் இருந்து 1.60 ரூபாய் வரை உயர்த்துமாறு மின் வினியோக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
33 பைசா உயர்வு
மேலும் அந்த நிறுவனங்கள் ரூ.7,217 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றை பரிசீலித்து ஆண்டுக்கு ரூ.1,960 கோடி கூடுதலாக நிதியை சேகரிக்கும் வகையில் மின் கட்டணம் சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 33 பைசா உயர்த்தப்படுகிறது.
18 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் கட்டண உயர்வு சராசரியாக 4.80 சதவீதம் ஆகும். புதிய அனல்மின் நிலையங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலை அதிகரித்துள்ளது. அதனால் இந்த கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை.
முன்தேதியிட்டு அமல்
பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.20 சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்படும். மின்கசிவு 12½ சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை மின்கசிவு மூலம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளோம். இந்த கட்டண உயர்வு முன்தேதியிட்டு கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
கர்நாடகத்தில் 28.10 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப் படுகிறது. மாநில அரசு மானியத்தொகையாக ரூ.11 ஆயிரத்து 780 கோடியை மின் நிறுவனங்களுக்கு வழங்குகிறது. கட்டிடங்களின் கூரை மீது சூரியசக்தி மின்சாரத்தை தயாரிக்க ஊக்கத்தொகை வழங்க சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு சம்புதயாள் மீனா கூறினார்.
ஜூன் கட்டணத்துடன்...
மின் கட்டண உயர்வு 2 மாதங்களுக்கு முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுவதால், ஏப்ரல், மே மாத கட்டணத்தில் உயர்ந்ததொகை, ஜூன் கட்டணத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.