விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு: உறவினர்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

தனியார் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி உயிர் இழந்த தொழிலாளியின் உறவினர்கள் நேற்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

Update: 2019-05-30 21:30 GMT
கயத்தாறு, 

தனியார் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி உயிர் இழந்த தொழிலாளியின் உறவினர்கள் நேற்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

தொழிலாளி சாவு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவர் கயத்தாறு பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

அவருடைய மகன் சுரேஷ் (வயது 27). இவர் நெல்லை அருகே கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.

கடந்த 28-ந்தேதி இரவு வழக்கம் போல் சுரேஷ் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சில் ஏறி வேலைக்கு சென்றார். பின்னர் அந்த நிறுவனத்தில் பாய்லர் பிரிவில் பணியில் ஈடுபட்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி அவர் மூச்சுத்திணறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

சக தொழிலாளிகள் அவரை மீட்டு நெல்லையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சி

இதனை அறிந்த சுரேசின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து புகார் அளித்தனர். நேற்று காலையில் சுமார் 200 பேர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதே நேரத்தில் அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது சுரேசின் பெற்றோர், தனது மகன் இறப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். நிறுவனத்தின் பாய்லர் பிரிவில் பாதுகாப்பு உபகரணங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

அங்கு பணியில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அங்கு வேலை பார்க்கும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

உடலை வாங்கி...

இந்த கோரிக்கைகளை அந்த நிறுவன அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்