நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்த ஆண் தலையால் பரபரப்பு உடலை தேடும் பணி தீவிரம்

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்த ஆண் தலையால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2019-05-30 21:30 GMT
நெல்லை, 

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மிதந்து வந்த ஆண் தலையால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ஆற்றில் மிதந்து வந்த ஆண் தலை

நெல்லை அருகே உள்ள தாழையூத்து நாரணம்மாள்புரம் தாமிரபரணி ஆற்றில் நேற்று காலையில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் தனியாக மிதந்து வந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த தலையானது, அங்கு ஆற்றங்கரையில் ஒதுங்கி கிடந்தது.

இதுகுறித்து தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த தலையானது கருகிய நிலையிலும், மீன்கள் கடித்த நிலையிலும் இருந்தது. அந்த தலையை போலீசார் கைப்பற்றி, பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வேறு எங்கேனும் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்து தலையை தனியாக மர்மநபர்கள் துண்டித்துள்ளனர். பின்னர் அவர்கள், உடலை வேறு இடத்திலும், தலையை தாமிரபரணி ஆற்றிலும் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, கொலை செய்யப்பட்டவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை எதற்காக கொலை செய்தனர்? கொலையாளிகள் யார்? அவரது உடல் எங்கு வீசப்பட்டு உள்ளது? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நெல்லை மாவட்டத்தில் மாயமானவர்களின் விவரங்களையும் சேகரித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பரபரப்பு

கொலை செய்யப்பட்டவரின் உடல் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் எங்கேனும் வீசப்பட்டு உள்ளதா? எனவும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் ஆண் தலை மிதந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்