கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் பாபநாசத்தில் நடந்தது

பாபநாசத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-30 22:45 GMT
பாபநாசம்,

திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கி ரூ.300 கோடி மோசடி செய்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலை சங்க தலைவர் காதர் உசேன் தலைமை தாங்கினார். ஆலை சங்க செயலாளர் தம்புசாமி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திருஆரூரான் சர்க்கரை ஆலையை மாநில அரசு ஏற்று நடத்தி விவசாயிகளையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட வேண்டும். விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு பண பாக்கியை மாநில அரசு பெற்றுத்தரவேண்டும். சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு சம்பளபாக்கியை முழுமையாக வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் பெற்றுள்ள கடன்தொகை முழுவதையும் ஆலை நிர்வாகத்திடம் ஜப்தி செய்து வங்கிகளுக்கு செலுத்தி விவசாயிகளை கடன் வலையிலிருந்து அரசு பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மனு

இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர்கள் சாமிநடராசன், கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், சர்க்கரை ஆலை சங்க செயலாளர் முருகன், சர்க்கரை ஆலை சங்க தலைவர் காசிநாதன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட துணை தலைவர் ஞானமாணிக்கம், ஆலை சங்க நிர்வாகி முரளிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பாபநாசம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் வீராசாமியை நேரில் சந்தித்து, கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனு அளித்தனர். 

மேலும் செய்திகள்