மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-05-30 21:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் எஸ்.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் முனிராஜ், லட்சுமி மாது, தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

தி.மு.க. தலைவராகவும் தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்த கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும். தி.மு.க. மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல் மருத்துவ முகாம்களை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கோபால், சண்முகம், செல்வராஜ், சித்தார்த்தன், குமரவேல், சண்முகநதி, மாவட்ட சார்பு அமைப்பு நிர்வாகிகள் மணி, சந்திரமோகன், தங்கமணி, ரகீம், பொன்மகேஸ்வரன் உள்பட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்