நீர்பிடிப்பு பகுதிகளில் மழை: கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.;

Update:2019-05-31 03:30 IST
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் முதல் மதகு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி உடைந்தது. அணையின் 8 மதகுகள் மாற்றியமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், முதற்கட்டமாக உடைந்த மதகை மட்டும் அகற்றிவிட்டு, ரூ.3 கோடியில் புதிய மதகு பொருத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அணை பாசன விவசாயிகளுடன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, 2-ம் போக சாகுபடிக்கு மார்ச் மாதம் வரை தண்ணீர் வழங்கப்படும், அதனை தொடர்ந்து 7 மதகுகள் மாற்றிமைக்கும் பணிகள் தொடங்குவதால், பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்படும் என தெரிவித்தனர்.

2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், 7 மதகுகள் மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை கருத்துரு அனுப்பினர். இதனை தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அலுவலர்கள் அணையில் ஆய்வுகள் மேற்கொண்டனர். 7 மதகுகள் மாற்றியமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், திட்ட மதிப்பீடுக்கு ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டது.

மேலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு முற்றிலும் குறைந்தது. அணையின் நீர்மட்டமும் 23 அடிக்கு கீழ் சென்றது. அணையின் மேற்குபுறத்தில் முற்றிலும் வறண்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வந்தது.

அதன்படி நேற்று முன்தினம் அணையின் நீர்வரத்து 312 கனஅடியாக இருந்தது. நேற்று காலை அணையின் நீர்வரத்து 333 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 35.80 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 7 மதகுகள் மாற்றியமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதாலும், அதற்கான அரசாணை வெளியிட்டு, ஒப்பந்த பணிகள் மேற்கொள்ள மேலும் காலதாமதம் ஏற்படும் என்பதால், முதல்போக சாகுபடி மேற்கொள்ள அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாகவே அணைக்கு வரும் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்