குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டு இருந்த 7 மின் மோட்டார்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாடுதுறை அருகே அதிகாரிகளின் நடவடிக்கையின்பேரில் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டு இருந்த 7 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-05-30 22:45 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சில ஊராட்சிகளில் கோடைக்காலத்தையொட்டி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரை, சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரித்தார்.

இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை, சிலர் முறைகேடாக மின்மோட்டார் மூலம் உறிஞ்சுவதாக, மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்துக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

மின்மோட்டார்கள் பறிமுதல்

அதன்பேரில் மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் பவானி, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் வள்ளாலகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவு நகரில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சில வீடுகளில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது தெரிய வந்தது. பின்னர் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டு இருந்த 7 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி கூறுகையில், தற்போது கோடைக்காலமாக இருப்பதால் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை சட்டவிரோதமாக உறிஞ்சினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

ஆய்வின்போது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைவிழி, ஷோபனா, பன்னீர்செல்வம், பிரேமா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்